இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலமான பீகாரில், பாலிகஞ் என்னுமிடத்தில் மாநிலத் தேர்தலின் போது வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நிற்கிறார்கள். 2021 ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைக்கான தேர்தல் நடத்தத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. (AP/Aftab Alam Siddiqui)

2021 மாநில சட்டசபை தேர்தல்கள்: பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி

அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 2021 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளன.. 

இந்தத் தேர்தல் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் பணியில் உள்ள ஊடகப் பணியாளர்கள் உடல் ரீதியான தாக்குதல், தீவிர மிரட்டல், துன்புறுத்தல், கொரோனா வைரஸ் தாக்கம், கைது செய்யப் படுதல், சிறையில் அடைக்கப் படுதல், அரசாங்கத்தின் இணையதளத் தொடர்பு சம்பந்தமான கட்டுப்பாடுகள் ஆகியவை பற்றி அறிந்திருப்பது அவசியம். 2020 ஆண்டில் இந்தியாவில் குறைந்த பட்சம் இரண்டு பத்திரிகையாளர்கள் தங்கள் வேலை தொடர்பாகத் தாக்குதலுக்கு உள்ளாகி மறைந்தனர். 

The Federal என்ற செய்தி இணைய தளத்தின் இணை ஆசிரியர் கெ.கெ. ஷஹீனா தொலைபேசி மூலம் CPJ இடம் பேசிய போது தெரிவித்தது வருமாறு. 

“பொதுவாக ஆசிரியர்கள் நிருபர்களிடம் தங்கள் பணியில் எதிர் கொள்ளக்கூடியத் தீவிர ஆபத்துக்களைப் பற்றி விசாரிப்பதில்லை. ஆபத்துகளை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் உள்ள வழிகளைப் பற்றி இந்தத் துறையில் இதுவரை எந்த வழிமுறை கொடுக்கப்படவில்லை. அது பற்றிய எந்த விவரங்களும் இன்றியே செய்தியாளர்கள் பணிக்குச் செல்கிறார்கள்.”

CPJ Emergencies தேர்தல் களத்தில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டியினை உருவாக்கியுள்ளது. இதில் ஆசிரியர்கள், நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சட்டப்பேரவைத் தேர்தல் களப்பணிக்கு தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்வது என்று விளக்கியுள்ளது. இதில் டிஜிட்டல், உடல் மற்றும் மன ரீதியான தாக்குதல்களுக்கு எதிராக தங்களை எப்படித் தயார் செய்து கொள்வது என்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் பாதுகாப்புக்கான வழிகாட்டிகள் PDF பதிவுகளாக ஆங்கிலம், தமிழ், பெங்காலி, அசாமீஸ், மலையாளம் ஆகிய மொழிகளில், டௌன்லோடு செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன.


தொடர்புக்கு 

CPJ Emergenciesஅவசரநிலைகளில் தொடர்பு கொள்ளலாம் [email protected]. மூத்த ஆராய்ச்சியாளர் ஆலியா இப்திகரை [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இந்திய நிருபர் குணால் மஜும்தாரை [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

அதோடு CPJ-வின் தகவல் மையத்தில் “பணிக்குச் செல்வதற்கு முன்பு தயார் செய்து கொள்ளுதல்” மற்றும் “நிகழ்வுகளுக்குப் பிறகு தேவைப்படும் உதவி கள்” போன்ற விவரங்களைப் பெறலாம். 

ஃபிப்ரவரி 14, 2017 அன்று பத்திரிகையாளர்கள் புது டில்லி உச்சநீதி மன்றத்தின் வெளிப்புறத்தில் வேலை செய்கிறார்கள். (AP/Altaf Qadri)

ஆசிரியர்களுக்கான பாதுகாப்பு checklist

ஆசிரியர்கள் நிருபர்களை தேர்தல் நேரத்தில் மிகக்குறுகிய கால அவகாசத்தில் செய்தி சேகரிக்க அனுப்ப நேரலாம். எனவே இந்த checklist செய்தியாளர்கள் சந்திக்கக்கூடிய ஆபத்துக்களைக் குறைக்க எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை விளக்குகிறது.

செய்தியாளர்களைத் தேர்ந்தெடுத்தல்

  • தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இப்பணிக்குத் தேவையான அனுபவம் உள்ளவர்களா? 
  • கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்படக்கூடிய பிரிவுக்குட்பட்டவரா? அவரைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் என்ன?
  • விரோத சூழல் இருக்கும் பட்சத்தில், அவரது சுயவிவரம்: அவர் ஆணா, பெண்ணா, அவரின் மதம், இனம் ஆகியவை அவரை அதிக ஆபத்துக்கு இலக்காக்குமா?
  • அவர் அந்தப் பணிக்கு எல்லா விதத்திலும் தகுதியானவரா அல்லது அப்பணியின் போது அதிகம் பாதிக்கப்படக்கூடிய உடற்கூறு ஏதும் உள்ளவரா? அது பற்றி அவரோடு பேசியிருக்கிறீர்களா?
  • தேர்ந்தெடுக்கப்பட்டவருக்குக் குறிப்பிட்ட வேலை அவரை அதிக ஆபத்துக்கு உள்ளாக்கும் நிலை உள்ளதா? உதாரணமாக பணிக்களத்திற்கு மிக அருகில் இருக்கக் கூடிய புகைப்படக் கலைஞர்கள்.

பணிக்கான சாதனங்களும், போக்குவரத்து ஏற்பாடுகளும்

  • தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களோடு கொரோனா தொடர்பான ஆபத்துகள் பற்றி விவாதித்துள்ளீர்களா? அவருக்கு தரமான முகக்கவசங்களும் ஆல்கஹால் (alcohol) கொண்ட சானிடைசர்களும் (sanitizer) கொடுக்கப்பட்டுள்ளதா?
  • வன்முறை நிகழும் பட்சத்தில் பாதுகாப்புத் தலைக்கவசங்கள், கண்ணாடிகள், உடல் கவசம், கண்ணீர் புகை சுவாசக் கருவிகள், முதலுதவி சாதனங்கள் (first aid kits) போன்ற பாதுகாப்புக் கருவிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறதா? அவற்றை உபயோகிக்கும் முறைகள் பற்றி பணியாளர்களுக்குத் தெரியுமா?
  • பணிக்கு அனுப்பப்படுபவர்கள் தாங்களே வண்டியோட்டிச் செல்கிறார்களா? அந்த வாகனங்கள்  அப்பணிக்குத் தகுதியானவை தானா?
  • அவர்களோடு எப்படி தொடர்பு கொள்வது, ஆபத்தான சந்தர்ப்பங்களில் அவர்கள் அங்கிருந்து எப்படி விலகிச் செல்வது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டிருக்கிறதா?

பொதுவான கருத்துக்கள்

  • பணிக்கு அனுப்பப்பட்டவர்களின் அவசரகாலத் தொடர்பு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கிறதா?
  • எல்லாப் பணியாளர்களும் முறையான அங்கீகாரம், ஊடக பாஸ், உங்கள் நிறுவனத்தில் வேலை செய்வதைக் குறிக்கும் கடிதங்கள் வைத்திருக்கிறார்களா?
  • அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் உள்ள ஆபத்தின் அளவு பற்றி அறிந்திருக்கிறீர்களா? உங்கள் குழு எதிர்கொள்ளும் ஆபத்து அந்த செய்தி தொகுப்பினால் உண்டாகும் பயனோடு கணக்கிடும்போது ஏற்றுக் கொள்ளக் கூடியதா?
  • குழு சரியான முறையில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருக்கிறதா? நீங்கள் மருத்துவ பாதுகாப்பிற்கான முறையான ஏற்பாடுகள் செய்திருக்கிறீர்களா?
  • அருகிலுள்ள  மருத்துவ  வசதிகள் பற்றிய விவரங்கள்  குழுவுக்கு  தரப்பட்டுள்ளதா?
  • பணியினால் ஏற்படக்கூடிய நீண்ட கால மன அழுத்த பாதிப்புகள் பற்றித் தெரிந்து கொண்டு குழுவினரோடு அதைப் பற்றி பேசியிருக்கிறீர்களா?

ஆபத்து பற்றி கணிப்பது மற்றும் திட்டமிடுதலுக்கு CPJ Resource Center பார்க்கவும்.

நவம்பர் 6, 2020 அன்று எடுக்கப் பட்ட இந்த்ப் படத்தில், இந்தியாவில், மும்பையில் ஒரு பயனர் தன்னுடைய மொபைல் போனில் ஃபேஸ்புக்கின் வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்கிறார். (AFP/Indranil Mukherjee)

டிஜிட்டல் பாதுகாப்பு: அடிப்படை சாதனங்களை தயார் செய்தல்

தேர்தல் செய்தி சேகரிப்பின் போது செய்தியாளர்கள் தங்களுடைய அலைபேசியை (cell phone) செய்திகளைத் தொகுக்கவும், தகவல்கள் சேகரிக்கவும் உபயோகிக்கக் கூடும். செய்தியாளர்கள் பிடித்து வைத்துக் கொள்ளப் பட்டாலோ அல்லது அவர்கள் அலைபேசி பறிமுதல் செய்யப் பட்டாலோ, உடைந்து போனாலோ அவர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்புப் பிரச்சனை உண்டாகலாம்.

எனவே பணிக் களத்துக்குச் செல்வதற்கு முன்:

  • உங்கள் அலைபேசி அல்லது கணினியில் என்னென்ன விவரங்கள் உள்ளன, அவை பறிமுதல் செய்யப்பட்டாலோ, பிடித்து வைக்கப் பட்டாலோ, அந்த விவரங்கள் உங்களையும் உங்களைச் சேர்ந்தவர்களையும் எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று தெரிந்து கொள்வது அவசியம். 
  • எடுத்துச் செல்லும் உங்கள் அலைபேசியில் உள்ள விவரங்களை ஒரு ஹார்ட் டிஸ்கில் (hard disk) பதிவு செய்து உங்கள் அலைபேசியில் உள்ள குடும்ப போட்டோக்கள் மற்றுமுள்ள விவரங்களை நீக்கி விடுங்கள்.
  • பணியில் நீங்கள் உபயோகிக்கத் தேவையில்லாத சொந்த கணக்குகள் (accounts) மற்றும் செயலிகளிலிருந்து log out செய்வதோடு browsing விவரங்களையும் நீக்கி விடுங்கள். உங்கள் அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டாலோ, ஆராயப்பட்டாலோ உங்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை மற்றவர்கள் அறிந்து கொள்வது இதன் மூலம் தவிர்க்கப்படும். 
  • பாஸ்வேர்ட் (password) மூலம் உங்கள் அலைபேசியை பாதுகாக்கத் தவறாதீர்கள். Remote wipe என்னும் வசதியை இதற்கு உபயோகப் படுத்துங்கள். Remote wipe இணையதள தொடர்பு உள்ளபோது மட்டுமே செயல்படும். உங்கள் கைரேகை போன்ற biometric முறைகள் மூலம் உங்கள் அலைபேசியை திறக்கும் முறைகளை தவிர்க்கவும். நீங்கள் பிடித்து வைக்கப் படும் சூழ்நிலையில் இவை அலைபேசியை திறக்கும் முறையை எளிதாக்கி விடும். 
  • முடிந்த அளவு குறைந்த சாதனங்களையே எடுத்துச் செல்லுங்கள். முடிந்தால் உங்கள் சொந்த சாதனங்களை தவிர்த்து வேறு சாதனங்களை ஏற்பாடு செய்து கொண்டு செல்லுங்கள். 
  • ஐபோனில் (iPhone) encryption என்னும் முறை பொதுவாக கொடுக்கப்பட்டிருக்கும். உங்கள் ஆண்ட்ராய்டு (Android) போனில் அதை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். இது தொடர்பான சட்ட விவரங்களை முதலில் சரி பார்த்துக் கொள்ளுங்கள். 
  • மற்ற செய்தியாளர்களிடமும் உங்களுக்கு தகவல் தரும் நபர்களிடமும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை சிக்னல் (Signal) என்னும் செயலியில் தொடர்பு கொள்ளுங்கள்.
  • சில இணைய தளங்கள் ப்ளாக் (block) செய்யப்பட்டால் அவற்றைத் தொடர்பு கொள்ள VPN அமைத்துக் கொள்ளுங்கள். அது உபயோகிப்பது சம்பந்தமான சட்டரீதியான விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு முந்தைய சந்தர்ப்பங்களில் உபயோகமாக இருந்த VPN provider எது என்று குறித்துக் கொள்ளுங்கள். 
  • இணையதள இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ளுங்கள். 
  •  Pegasus போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட spyware ஊடகப் பணியாளர்களுக்கு எதிராக இந்தியாவில் செயல் படுத்தப்படுவதாக தெரிய வருகிறது. Citizen Lab ஆராய்ச்சிகள் மற்றும் CPJ நேர்காணல் மூலம் இது தெரிய வந்திருக்கிறது. உயர்தரமான spyware அமைப்புகள் ஒருமுறை உங்கள் போனில் இணைக்கப்பட்டால், encrypted செய்திகள் உள்பட எல்லா செயல்களையும் கவனித்து பதிவு செய்யும். இஸ்ரேலைச் சேர்ந்த NSO அமைப்பு Pegasus மென்பொருள் கண்காணிப்பு கருவியாக அரசாங்கங்களுக்கு மட்டுமே சட்ட அமலாக்கத்திற்காக விற்கப்படுகிறது என்றும் அவை ஒப்பந்தத்திற்கு எதிரான முறையில் உபயோகப்படுத்தப் படுவதாக ஆராய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் பலமுறை CPJ-யிடம் தெரிவித்துள்ளது. 

டிஜிட்டல் பாதுகாப்பு பற்றிய மற்ற விவரங்களுக்கு Digital Safety Guide பார்க்கவும்.

டிஜிட்டல் பாதுகாப்பு: பதிவுகளை சேமித்தலும் பாதுகாத்தலும்

தேர்தல் நேரத்தில் செய்திகளை சேகரிப்பது, பாதுகாப்பதும் சம்பந்தமான வழிமுறைகளை ஏற்பாடு செய்து கொள்வது மிக அவசியம். ஒரு ஊடகப் பணியாளர் பிடித்து வைக்கப்பட்டால் அவர்களது சாதனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு ஆராயப்படும். இதனால் செய்தியாளருக்கும் அவருக்கு செய்தி தருபவருக்கும் நிறைய பாதிப்பு ஏற்படலாம். தேர்தல் பணியின் போது சாதனங்கள் திருடப்படவோ, உடைக்கப்படவோ செய்யலாம். இதனால் சேகரிக்கப்பட்ட விவரங்களை சரியாக back up செய்யவில்லையானால் இழக்கவும் நேரலாம். 

கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் உங்களையும் உங்களால் சேகரிக்கப்பட்ட விவரங்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவும்:

  • உங்களது அலைபேசி, கணினி போன்ற எல்லா சாதனங்களிலும் என்னென்னெ விவரங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன எனச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கக் கூடிய அல்லது மிக முக்கியமான தகவல்கள் இருந்தால் அதற்கு back up எடுத்துக் கொண்டு அழித்து விடுங்கள். அழிக்கப்பட்ட விவரங்களை மீண்டும் பெற்று அறிந்து கொள்ள பல வழிமுறைகள் உள்ளதால் முக்கியமான தகவல்களை back up செய்த பிறகு நிரந்தமாக அழித்து விட வேண்டும். 
  • போனில் உள்ள தகவல்களை சரி பார்க்கும் போது அலைபேசி ஹார்டுவேர் மட்டுமல்லாமல், Google Photos, iCloud போன்ற cloud-ல் சேர்த்து வைக்கப்பட்டுள்ள விவரங்களையும் கவனிக்க வேண்டும்.
  • வாட்ஸப் போன்ற செயலிகளில் உள்ள விவரங்களையும் சரி பாருங்கள். செய்தியாளர்கள் தங்களுக்கு பிரச்சனையைத் தரக்கூடிய எல்லா விவரங்களை தங்கள் சாதனத்தில் இருந்து நிரந்தரமாக  அழித்து விட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாட்ஸப்பில் வைக்கப்படும் விவரங்கள் Google, iCloud போன்ற அந்த account சம்பந்தமான cloud-ல் back up செய்யப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • உங்களால் சேகரிக்கப்பட்ட விவரங்களை எங்கே back up செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். விவரங்கள் வேறு தனிப்பட்ட hard drive அல்லது USB அல்லது cloud போன்ற எந்த அமைப்பில் சேகரிக்கப்படுவது சரி என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
  • ஊடகப் பணியாளர்கள் தாங்கள் சேகரித்த தகவல்களை அடிக்கடி முறையாக வேறு சாதனங்களுக்கு மாற்றுவது, back up செய்வது என்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் சாதனம் உங்களிடமிருந்து பறிக்கப்பட்டாலோ, திருடப்பட்டாலோ அதன் பிரதி வேறு இடத்தில் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள முடியும்.
  • அந்த விவரங்களையும் encrypt செய்து கொள்வது நல்லது. உங்களது external drive, hard drive, USB போன்ற உங்கள் எல்லா சாதனங்களிலும் encrypt வசதி அமைத்துக் கொள்வது நல்லது. ஆனாலும் செய்தியாளர்கள் தாங்கள் பணி செய்யும் நாட்டில் encrypt உபயோகிப்பது சம்பந்தமாக உள்ள சட்ட திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம்.
  • நீங்கள் குறி வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று சந்தேகம் எழுந்தால், உங்கள் சாதனம் மற்றும் hard drive போன்றவற்றை திருடிச் செல்லக்கூடும் என்று நீங்கள் சந்தேகப்பட நேர்ந்தால் அவற்றை உங்கள் வீடு தவிர வேறு ஏதாவது இடத்தில் வைக்கவும்.
  • உங்கள் எல்லா சாதனங்களிலும் PIN lock முறையை உபயோகியுங்கள். அது நீண்டதாக இருந்தால் அதை unlock செய்வது கடினமாகும்.
  • உங்கள் அலைபேசி மற்றும் கணினியை remote lock முறையில் அமைத்துக் கொள்ளுங்கள். இதனால் அதிகாரிகள் கையில் உங்கள் சாதனம் மாட்டிக் கொண்டால் அதில் உள்ள விவரங்களை அழித்து விட முடியும். ஆனால் இதற்கு அந்த சாதனம் இணைய தளத்தில் இணைக்கப் படுதல் அவசியமாகிறது.

டிஜிட்டல் பாதுகாப்பு: பாதுகாப்பான தகவல் தொடர்பு

எப்படி தகவல்களை பரிமாறிக் கொள்வது என்று தெளிவாக அறிந்து கொள்வது உங்கள் டிஜிட்டல் பாதுகாப்பின் மிக முக்கியமான அங்கம். அதுவும் கொரோனா காரணமாக ஊடக பணியாளர்கள் தொலைவில் இருந்து பணியாற்றுவதால் இது அவசியம். ஆசிரியர்கள் நேரில் சந்தித்துக் கொள்வதைத் தவிர்த்து conferencing platform மூலம் செய்திகள் பறிமாறிக் கொள்வதால் யார் யார் இந்த தொலை பேசி அழைப்புகளையும், webinar விவரங்களையும் அணுக முடியும் என்பது பற்றிய முடிவுகளை வரையறுத்துக் கொள்வது மிக அவசியமாகிறது. 

  • தேவையென்றால் உங்கள் account-களை நீண்ட அல்லது வித்தியாசமான password அமைத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதோடு two-level authentication அமைத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் அலுவலுக்கான தனி மின்னஞ்சல் (email) கணக்கு வைத்துக் கொண்டு அதை மட்டுமே இணையதள conferencing போன்றவற்றுக்கு உபயோகியுங்கள். இதனால் உங்கள் தொடர்பிலுள்ளவர்கள், சொந்த விவரங்கள் போன்றவை இணையதள online conferencing செயலிகள் மற்றும் அதில் பங்கு பெறுபவர்களுக்கு தெரிய வருவது தவிர்க்கப்படும்.
  • Conferencing நிகழ்ச்சிகளின் விவரங்களை சமூக வலைதளங்களில் (social media)  பகிர்வதைத் தவிர்த்து விடுங்கள்.
  • நீங்கள் உபயோகிப்பது latest version conferencing அமைப்பு என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • பத்துக்கும் குறைவான எண்ணிக்கைக் கொண்டவர்களுடன் வீடியோவில் பேச நேரும் சமயத்தில் வாட்ஸப் அல்லது சிக்னல் (Signal) செயலிகளை உபயோகப் படுத்துங்கள்.

ஜூம் (Zoom) செயலியை உபயோகித்தல்:

ஜூம் (Zoom) அமைப்பை உபயோகிக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை கவனித்துக் கொள்ளுங்கள்:

  • ஜூம் ஒவ்வொரு உபயோகிப்பாளருக்கும் சொந்தமான ஒரு அடையாள எண்ணை உருவாக்குகிறது. அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
  • உங்கள் மீட்டிங்கில் கலந்து கொள்வதற்கு ஒரு பாஸ்வேர்ட் (PASSWORD) ஏற்படுத்துங்கள்.
  • Waiting room அமைப்பை ஏற்படுத்துங்கள். இதன் மூலம் உங்களால் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அதோடு அதில் கலந்து கொள்ளக் காத்திருப்பவர்கள் யார் யார் என்பதைக் கவனிக்கவும் தெரியாதவர்களையும், அழைக்கப் படாதவர்களையும் வெளியேற்றவும்.
  • அழைக்கப் பட்டவர்கள் வந்து சேர்ந்தவுடன் meeting room அமைப்பை lock செய்து விடுங்கள்.
  • வீடியோவையும் மைக்கையும் (mic) அணைத்து விடுவதன் மூலமும் யார் screen share செய்யலாம் என்று தீர்மானிப்பதன் மூலமும் அதில் கலந்து கொள்பவர்களை கட்டுப்படுத்தலாம்.
  • ஜூம் அழைப்பிலிருந்து எந்த நேரத்திலும் யாரையும் வெளியேற்றலாம் திரும்பவும் சேர்ந்து கொள்ளாமல் தடை செய்யலாம்.
  • ஜூம் உபயோகிக்கும் போது அதன் சமீபத்திய latest version உபயோகிப்பதையும், ஆரம்பத்திலிருந்து முடிவு வரை end-to-end encryption ஏற்பாடு செய்து கொள்வதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

டிஜிட்டல் பாதுகாப்பு: இணையதள ட்ரோலிங் (Trolling), தவறான தகவல் பரப்புதல்

இலக்குக் குறிக்கப்பட்ட, பொய் பிரசாரங்கள் கூடிய தவறான இணையதள தொல்லைகள் தேர்தலின் போது அதிகரிக்கலாம். செய்தியாளர்கள் மற்றும் அவரது வேலைகளும் இணையதள தாக்குதல் நடத்துவோரால் இலக்குக் குறிக்கப்படுகின்றன. திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட தொந்தரவுகளாலும், தவறான பொய் பிரசாரங்களாலும் செய்தியாளர்கள் சமூக வலைதளங்களிலிருந்து விலகியிருக்க நிர்பந்திக்கப் படுவது அடிக்கடி நேரிடலாம். குறிப்பாக இந்தியாவில் பெண் நிருபர்கள் troll செய்யப்பட்ட பல நிகழ்வுகளை CPJ அறிந்திருக்கிறது. இதற்கு எதிராக தற்காப்பு செய்து கொள்வது எளிதல்லவென்றாலும் செய்தியாளர்கள் தங்களையும் தங்கள் account-களையும் காத்துக்கொள்ள சில முறைகளை பயன்படுத்தலாம்.

உங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள:

அக்கவுண்ட் பாதுகாப்பு

இணையதள தொல்லையாளர்கள் வலைதளங்களிலிருந்து உங்கள் சொந்த விவரங்களை உங்களுக்கு எதிராக பயன்படுத்துவார்கள். இதை தவிர்க்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்:

  • ஒரு நீண்ட, வலுவான password உருவாக்கிக் கொள்ளுங்கள். அது குறைந்தது 16 characters கொண்டதாகவும், வித்தியாசமானதாகவும், ஒவ்வொரு account-க்கும் வேறாகவும் இருக்கட்டும். 
  • Two-factor authentication ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
  • உங்கள் privacy settings சரி பார்த்து உங்கள் அலைபேசி எண்கள், பிறந்த நாள் போன்ற சொந்த விவரங்களை நீக்கி விடுங்கள். உங்கள் சமூக வலைதளங்களில் உள்ள விவரங்களை யார் யார் தெரிந்து கொள்ள முடியும் போன்ற privacy settings மாற்றிக் கொள்ளுங்கள்.
  • உங்கள் account-களை சரி பார்த்து அதில் தவறாக உபயோகப்படுத்தப் படுவதன் மூலம் private ஃபோட்டோக்கள், மற்ற படங்களை நீக்கி விடுங்கள். இவை troll செய்வதற்கு உபயோகப்படுத்தப் படுவது வழக்கம்.
  • Trolling செயல் உங்கள் account-களில் அதிகமாகி  வருவதற்கான அறிகுறிகளை கவனித்து வாருங்கள். ஒரு டிஜிட்டல் மிரட்டல் உடல் ரீதியான தாக்குதலாக மாறலாம். சில செய்திப்பதிவுகள் அதிகமான தொந்தரவுகளுக்குக் காரணமாக அமையலாம்.
  • உங்கள் குடும்ப உறவினர்களோடும் நண்பர்களோடும் இணையதள தொந்தரவுகளைப் பற்றிப் பேசுங்கள். Troll செய்பவர்கள் உங்கள் உறவினர்கள், நண்பர்களின் சமூக வலைதள account-டிலிருந்து நிருபர்கள் சம்பந்தமான விவரங்களைச் சேகரிக்கிறார்கள். எனவே அவர்கள் கணக்கிலிருந்து உங்கள் சம்பந்தப்பட்ட ஃபோட்டோக்கள் மற்றும் விவரங்களை நீக்க முயலுங்கள்.
  • Trolling தீவிரமானால் உங்கள் ஆசிரியருடன் என்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என திட்டமிடவும்.

தாக்குதலின் போது:

  • இணையதளத் தொல்லை தருபவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதைத் தவிருங்கள். இல்லையென்றால் அது நிலமையை மோசமாக்கலாம்.
  • இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார், அவர்களது குறிக்கோள் என்ன, என்பது பற்றி கண்டுபிடிக்க முயலுங்கள். நீங்கள் சமீபத்தில் வெளியிட்ட பதிவு இதற்குக் காரணமாகவும் இருக்கலாம்.
  • நிருபர்கள் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மற்றும் பயமுறுத்தும் நடவடிக்கைகள் பற்றி தாங்கள் பணி புரியும் ஊடக நிறுவனத்திற்கு தெரிவிப்பது அவசியம்.
  • உங்களுக்கு எதிராக கருத்துக்கள், மிரட்டல்கள் மற்றும் வசவுப் பதிவுகள், trolling பதிவுகளின் screen shots சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் தேவைப் படும்போது உங்கள் செய்தி நிறுவனம், ஆசிரியர், செய்தியாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இவை உபயோகப்படலாம்.
  • Hacking அறிகுறிகள் தெரிகிறதா என்று கவனித்துக் கொண்டிருங்கள். உங்கள் account-களை வலுவான, நீண்ட password, two-factor authentication மூலம் பாதுகாக்க முயலுங்கள்.
  • உங்கள் நிறுவனம், நண்பர்கள், குடும்ப உறவினர்களுக்கு நீங்கள் இணைய தளத்தில் தாக்கப்பட்டு வருவது குறித்து தெரிவியுங்கள். உங்கள் செய்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், உங்கள் குடும்ப உறவினர்கள், வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு உங்களைப் பற்றிய செய்திகள், படங்களை அனுப்புவதன் மூலம் உங்களைப் பற்றி அவதூறைப் பரப்ப முயலலாம்.
  • உங்களைத் தொந்தரவு செய்து வருபவர்களை உங்கள் தொடர்பிலிருந்து block அல்லது mute செய்ய நீங்கள் விரும்பலாம், நீங்கள் தொடர்பிலுள்ள செய்தி நிறுவனங்களுக்கு சமூக வலைதளங்களில் உங்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் பற்றித் தெரிவிப்பதோடு அவை சம்பந்தமான பதிவுகளைச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் சமூக வலைதள account-களைத் தொடர்ந்து கவனித்து இணையதள மிரட்டல்கள் உடல் ரீதியான தாக்குதல்களாக மாறக் கூடியவையா என்று அறியுங்கள். உங்கள் விலாசத்தை இணைய தளத்தில் பகிர்வது (doxxing), மற்றவர்களை உங்கள் மீது தாக்குதல் நடத்த அழைப்பது, உங்கள் மீது ஒரு குறிப்பிட்ட நபர் நடத்தும் தாக்குதல், விமர்சனங்கள் இவற்றில் சேரும்.
  • இந்த விதமான பிரச்சனைகள் அடங்கும் வரை இணையதளத்தில் இருந்து விலகியிருக்க முயலுங்கள்.
  • இணையதளத் தாக்குதல் தனிப்படுத்தும் அனுபவமாக இருக்கக் கூடும். உங்களுக்கு உதவி செய்ய ஒரு ஆதரவு நெட்வொர்க் (network) உருவாக்கிக்கொள்ளுங்கள்.
ஜூன் 12, 2020 அன்று, கோவிட்-19 க்கு எதிரான கட்டுப் பாடுகளை அதிகாரிகள் தளர்த்திய பிறகு பத்திரிகையாளர் பர்கா தத் (BARKHA DUTT) குரு தேக் பகதூர் ஆஸ்பத்திரியிலிருந்து ரிப்போர்ட் செய்கிறார். (AFP/Prakash Singh)

உடல்ரீதியான பாதுகாப்பு: கொரோனா 

தேர்தல் நிகழ்ச்சிகள், அவை சம்பந்தமான போராட்டங்களின் போது மற்றவர்களிடமிருந்து விலகியிருந்து வேலை செய்வது என்பது கடினம். பொதுவிடங்களில் நடக்கும் பெரியக் கூட்டங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணியாமல் இருக்கலாம். ஊடக பணியாளர்கள் மற்ற நிருபர்களுடன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்ந்து இருக்க நேரலாம். இதனால் கொரோனா தாக்குதலுக்கும், கோபமாக இருக்கும் பொது மக்களின் பேச்சு மற்றும் உடல்ரீதியான தாக்குதலுக்கும் ஆளாகலாம். வேண்டுமென்றே செய்தியாளர்களின் அருகில் வந்து இருமுவது, தும்முவது போன்றவற்றை சிலர் செய்யலாம்.

மக்கள் ஆவேசமாக கத்தும்போது கொரோனா துளிகள் பரவும் வாய்ப்பு அதிகரிப்பதால் பணியாளர்கள் கொரோனா தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கலாம்.

  • பொது கூட்டங்களுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் இந்திய மாநிலங்களில் ஒன்றுக்கொன்று வேறுபடலாம். தவிரவும் முன்னெச்சரிக்கையின்றி மாற்றப்படலாம். எனவே பணிக்களத்தில் உள்ளக் கட்டுப்பாடுகள் பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் களப்பணியாளர்கள் கட்டுப்பாடுகளை மீறுவதாக பல நேரங்களில் போலீஸால் தாக்கப் படுவதும் பிடித்து வைக்கப்படுவதும் பலமுறை நிகழ்ந்திருக்கிறது.
  • சர்வதேசப் பயணங்கள், மற்றும் மாநிலங்களுக்கு இடையில் பயணிக்கும் போது நீங்கள் சமீபத்திய கொரோனா டெஸ்ட் சம்பந்தமான சான்றுகள் கொடுக்கவோ, தனிமைப் படுத்தலில் (quarantine) இருக்கவோ  நேரலாம். 
  • (இது சம்பந்தமாக இந்திய மாநிலங்களின் வழிகாட்டி இங்கே இணைக்கப் பட்டிருக்கிறது.)
  • கூட்டங்களில் வேலை செய்யும் போது N95, FFP2 போன்ற தரமான முக்கவசங்கள் அவசியம். முகக்கவசம் அணியாததற்காக அபராதம் கட்ட அதிகாரிகளால் நீங்கள் நிர்ப்பந்திக்கப்படலாம்.
  • பணியின் போது அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலம் முறையாகச் சுத்தம் செய்து கொள்வதையும் உலர வைத்துக் கொள்வதையும்  உறுதி செய்து கொள்ளுங்கள். அது முடியாத போது ஆல்கஹால் உள்ள சானிடைசர் (sanitizer) உபயோகியுங்கள், ஆனால் இது கைகளை சுத்தம் செய்வதற்கான சரியான முறையாகாது.
  • நீங்கள் உங்கள் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னால் உங்கள் ஆடைகளும், காலணிகளும் நீக்கிவிட்டு சூடான தண்ணீர் மற்றும் சோப்பால் சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • பணி முடிந்ததும் அனைத்து சாதனங்களும் முறையாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.

கொரோனா சம்பந்தமான மற்ற விவரங்களுக்கு CPJ-யின் பாதுகாப்புக் குறிப்புப் பகுதியை CPJ’S Safety Advisory-யில் காணவும்.

ஃபிப்ரவரி 12, 2021 அன்று, இடது சாரிக் கட்சி மாணவர்கள் நடத்திய பேரணியின் போது போலீசாரின் வன்முறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் பங்கு பெறும் எதிர்ப்புப் போராட்டம். (AP/Bikas Das)

உடல்ரீதியான பாதுகாப்பு: தேர்தல் பிரசாரங்கள் மற்றும் போராட்டக் களத்திலிருந்தும் செய்தி சேகரிப்பு

தேர்தல் மற்றும் போராட்டங்கள் பற்றி செய்தி சேகரிக்கும் போது நெரிசல் மிகுந்த பேரணிகள், பிரசாரக் கூட்டங்களில் ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்க்க பின்வரும் பாதுகாப்பு அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்:

அரசியல் நிகழ்வு மற்றும் பேரணிகள்

  • உங்களிடம் அங்கீகாரம் உள்ள பத்திரிகையாளருக்கான அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். Freelance reporter ஆக இருந்தால்  அந்த வேலைக்கு உங்களை நியமித்த நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடிதம் வைத்துக்கொள்ளுங்கள். பாதுகாப்பானது என்றால் மட்டுமே இந்த அடையாளங்களை வெளிப்படுத்தவும். அவற்றை கழுத்தைச் சுற்றித் தொங்க விட்டுக் கொள்ள வேண்டாம். உங்கள் பெல்டில் clip செய்யலாம் அல்லது மேல் கையில் வெல்க்ரோ வைத்து ஒட்டிக் கொள்ளலாம்.
  • உங்கள் உடைகளில் உங்கள் ஊடகப் பெயர் இருக்க வேண்டாம். தேவைப்பட்டால் ஊடக லோகோவை உங்கள் சாதனங்கள் மற்றும் வாகனங்களிலிருந்து நீக்கி விடுங்கள். 
  • Sandals மற்றும் slip-on வகைக் காலணிகளைத் தவிர்க்கவும். கடினமான அடிப்பகுதி மற்றும் lace கூடிய நல்ல பாதுகாப்பான ஷூக்களை (shoe) அணியுங்கள்.
  • உங்கள் வாகனங்களை பத்திரமான இடத்தில் வெளியேறும் திசை நோக்கி நிறுத்தி வையுங்கள். அதைத் தவிர ஒரு மாற்று வாகன ஏற்பாடும் செய்து வையுங்கள்.
  • வன்முறை வெடிக்கும் என்றால் அங்கிருந்து தப்பிக்கும் வழியை கையாள வேண்டும். அதை முன்னதாக அங்கு போய்ச் சேர்ந்த உடனேயே திட்டமிடவும். அவ்விடத்திலிருந்து வெளியேறும் எல்லா வழிகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
  • கூட்டத்தின் மனநிலையைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். அதைப் பற்றி அறிய அங்கு முன்னதாகவே போயிருக்கும் சக ஊடக நண்பர்களை அழைத்துக் கேளுங்கள். அதற்கேற்றார் போல் இன்னொரு செய்தியாளரையோ அல்லது புகைப்பட கலைஞரையோ உடன் அழைத்துச் செல்லலாம்.
  • நிகழ்ச்சி நடக்கும் போது பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து செய்தி சேகரிக்கவும். மற்ற இடங்கள் பாதுகாப்பானது என்றால் மட்டுமே அங்கே செல்லலாம். உங்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்படுமாயின் போலிஸ் மற்றும் அங்கிருக்கும் மற்ற பாதுகாவலர்கள் உங்களுக்கு உதவுவார்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • கூட்டமோ, பேச்சாளர்களோ ஊடகத்திற்கு எதிரான மனநிலையில் இருப்பார்களாயின் அவர்களின் வசைச் சொற்களுக்கு மனதைத் தயாராக்கிக் கொள்ளுங்கள். அம்மாதிரி சூழ்நிலையில் உங்கள் வேலையில் மட்டும் கருத்தூன்றி ரிப்போர்ட் செய்யுங்கள். வசைகளுக்கு எதிராக எதுவும் செய்ய வேண்டாம். கூட்டத்தோடு வாய்த் தகராறில் ஈடுபட வேண்டாம். அங்கு மற்றவர்கள் போல் அல்லாமல் நீங்கள் ஒரு professional  என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • கூட்டத்திலிருந்து உங்கள் மேல் துப்புவதற்கோ, ஏதாவது பொருளை எறிவதற்கோ வாய்ப்பிருந்தாலும் திடமாக நின்று ரிப்போர்ட் செய்யுங்கள். பாதுகாப்புக்குத் தலையை மறைக்கும் கவசம், காயங்களைத் தவிர்க்கத் தொப்பி ஆகியவை அணியலாம்.
  • நிலைமை மேலும் ஆபத்து மிகுந்ததாக மாறுமானால் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருக்க வேண்டாம். அங்கிருப்பவர்களை கேள்வி கேட்க வேண்டாம்.
  • நிகழ்ச்சி நடக்குமிடத்தில் வெளியேயிருந்து ரிப்போர்ட் செய்வதாக இருந்தால் இன்னொரு பத்திரிகையாளரோடு கூட்டாக செய்வது நல்லது. வெளியேறும் வாயில்களுக்கு அருகே நின்று பாதுகாப்பாக ரிப்போர்ட் செய்யவும். அங்கிருந்து உங்கள் வாகனங்களை அடையும் வழியை முன்பே தெரிந்து வைத்திருங்கள். உங்கள் மீது தாக்குதல் நடக்க வாய்ப்பிருந்தால் உங்களுக்கு பாதுகாப்புத் தேவை என்பதை உணர்ந்து அங்கிருக்கும் நேரத்தைக் குறைத்து வெளியேறி விடுங்கள்.
  • உங்கள் வேலை மிகவும் சவாலானதாக இருக்கும்போது உங்கள் உணர்வுகளை உள்ளேயே பூட்டி வைக்காதீர்கள். உங்கள் மேலதிகாரிகளிடமும் உடன் வேலை செய்பவர்களிடமும் பேசுங்கள். அவர்கள் அது பற்றி அறிவதும் தயாராவதும் முக்கியம். எல்லோரும் ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக் கொள்கிறோம்.

போராட்டங்கள்: திட்டமிடல்

  • இந்தியா முழுவதிலும், போராட்டங்களில் கலந்து கொள்வோரை ஒடுக்குவதற்கு தோட்டாக்கள், ரப்பர் தோட்டாக்கள், pellet துப்பாக்கிகள், கண்ணீர் புகை, லத்திக் கம்பு போன்றவற்றை போலீசார் உபயோகப்படுத்தி வருகின்றனர். 
  • கலவரம் எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், பாதுகாப்பு கண்ணாடிகள், தலைக்கவசங்கள், கண்ணீர் புகை சுவாசக் கருவிகள், பாதுகாக்கும் உடற்கவசங்கள் போன்றவை வைத்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு காண்க: CPJ’s personal protective equipment (PPE) guide.
  • எந்த இடத்திற்கு செல்கிறீர்களோ, அவ்விடத்தின் அமைப்பை முன்னதாக ஆராய்ந்து அறிந்து கொள்ளவும். ஒரு அவசரத்தில் எப்படி இயங்க வேண்டும் என்பதை முன்கூட்டியே செயல்படுத்திப் பார்த்து, தப்பிக்க பாதுகாப்பான வழிகளை கண்டறிந்து கொள்ளவும். 
  • போராட்டக் களங்களில் செய்தியாளர்கள் தனியாக வேலை செய்ய முயற்சிக்கக் கூடாது. சக பத்திரிகையாளருடன் வேலை செய்ய முயன்று, உங்கள் தங்குமிடம், குடும்பம், நண்பர்களுடன் தகவல் பகிரும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். இருட்டிய பிறகு வேலை செய்வது ஆபத்தானதால் முடிந்தால் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு காண்க CPJ’s advice for journalists reporting alone.
  • உபயோகப் படுத்துவது எப்படி என்று அறிந்தால் ஒரு மெடிகல் கிட்டை எடுத்துச் செல்லவும். அலைபேசியில் battery முழுதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
  • தளர்வான ஆடைகள், அரசியல் முழக்கங்கள், media branding, military pattern உடைகள், அரசியல் கட்சி சார்ந்த வண்ணங்கள், தீப்பிடிக்கும் அபாயம் உள்ள துணிகள் (nylon) ஆகியவற்றை அணிய வேண்டாம். 
  • கடினமான அடிப்பகுதி கொண்ட, lace உடைய, கணுக்காலுக்கு (ankle) சப்போர்ட் தரும் காலணிகளை அணியவும். 
  • நீண்ட தலைமுடியை பின்னாலிருந்து பிடித்து இழுக்க முடியாமல் தூக்கி முடிந்து கொள்ளவும். எடுத்துச் செல்லும் மதிப்புமிக்க பொருட்களை குறைத்துக் கொள்ளவும். வண்டிகளில் உடையும் படியான கருவிகளை விட்டுச் செல்ல வேண்டாம். இருட்டிய பிறகு குற்றத்திற்கான வாய்ப்பு அதிகமாகிறது.

விழிப்புணர்வு:

  • உங்கள் நிலையைக் கருத்தில் கொண்டு எந்நேரமும் சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முடிந்தால், சுற்றிலும் பார்க்க வசதியாக பாதுகாப்பு அளிக்கும் சற்று உயரமான பகுதியைக் கண்டு கொள்ளவும். 
  • மற்றவர்களுடன் வேலை செய்யும் போது, அவசரத்தில் கூட, எப்பொழுதும் வெளியேறுவதற்கான வழியையும், ஒரு இடத்தையும் திட்டமிட்டுக் கொள்ளவும். 
  • மிக அருகில் உள்ள மருத்தவ வசதி கொண்ட இடத்தை அறிந்து வைத்துக் கொள்ளவும். கூட்டத்தில் வேலை செய்கையில் சரியான முறையைத் திட்டமிடவும்.  கூட்டத்தின் வெளிப் பகுதியிலேயே இருக்க வேண்டும். உள்ளே நடுவில், தப்பிக்கக் கடினமான இடத்தில் மாட்டிக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
  • கூட்டத்தைப் பற்றிய அதிகாரிகளின் மனப்போக்கையும், நடத்தையையும் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். கூட்டம் அத்துமீறினால் போலீசாரும் முரட்டுத் தனத்தை காட்டும்படி ஆகலாம். கலவரத்தை எதிர்கொள்ளும் படியான உடையணிந்த போலீஸ் அதிகாரிகளின் தோற்றம் அல்லது தூக்கி எறியும் எறிபொருள்கள் ஆகியவை கலவரம் எதிர்பார்க்கப்படுகிறது என்பதற்கான அடையாளங்கள். பாதுகாப்பான ஒரு இடத்திற்கு பின்வாங்கவும். அல்லது அவசரமாக விலகிச் செல்லத் திட்டமிட்டு வைத்துக் கொள்ளவும். 
  • புகைப்பட பத்திரிகையாளர்கள் நிகழ்வு நடக்கும் முக்கியமான இடத்தில் இருந்தாக வேண்டும் என்பதால் அவர்களுக்கு ஆபத்து அதிகம்.
  • புகைப்பட கலைஞர்கள் எப்போதும் சூழ்நிலையைக் கவனித்துக்கொள்ள தங்கள் பின்னால் ஒருவரை வைத்துக் கொள்ள வேண்டும். கேமராவிலிருந்து கண்களை உயர்த்தி அவ்வப்போது வெளிக்காட்சிகளை சில நொடிகளுக்கு ஒரு முறை பார்த்துக் கொள்ள வேண்டும். கழுத்து நெறிபடுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள காமிரா நாடாவை கழுத்தைச் சுற்றி அணியக்கூடாது. புகைப்பட பத்திரிகையாளர்கள் தள்ளி நின்று வேலை செய்ய முடியாது என்பதால், கூட்டத்தின் உள்ளே செலவிடும் நேரத்தை வெகுவாகக் குறைத்துக் கொள்வது முக்கியமானது. தேவையான படங்களை எடுத்துவிட்டு உடனே வெளியேறி விட வேண்டும். 
  • பத்திரிகையாளர்கள் ஆபத்தான கூட்டத்தில் அதிக நேரம் இருக்க வேண்டாம்.
டிசம்பர் 11, 2019 அன்று இந்தியாவில் குடியுரிமைச் சீர்திருத்த மசோதாவிற்கு எதிராக நட்த்தப் பட்ட போராட்டத்தின் போது போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை உபயோகிக்கிறார்கள். (AP/Anupam Nath)

போலீசாரால் கண்ணீர் புகை குண்டு உபயோகப் படப்பட்டால்:

கண்ணீர் புகையினால் தும்மல், இருமல், எச்சல் துப்புதல், கண்ணீர் வருதல், சளி உருவாகி மூச்சை அடைத்தல் போன்றவை ஏற்படும். சில பேருக்கு வாந்தி எடுப்பதால்  மூச்சு விடுதல் மிகச் சிரமமாகலாம். இந்த அறிகுறிகள், காற்றில் மிதக்கும் கொரோனா துளிகள் மூலம் தொற்று பரவ நேரிடும் சாத்தியத்தை அதிகப் படுத்துகிறது. இதனால், ஆஸ்துமா (asthma) போன்ற சுவாசப் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், கொரோனாவால் பாதிக்கப்படும் சாத்தியமுள்ளவர்கள் போராட்டம் போன்ற நிகழ்வுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், NPR எடுத்துக் காட்டியது போல, கண்ணீர் புகை ஒருவருக்கு கொரோனா போன்ற நோய்த்தொற்றுக் கிருமிகள் தாக்கும் சாத்தியத்தை அதிகப் படுத்துகிறது.

கண்ணீர் புகை தாக்குதல், அதன் விளைவுகள் பற்றி மேலும் அறியவும், வழிகாட்டுதலுக்கும், CPJ’s civil disorder advisory பார்க்கவும். 

உடல் ரீதியான தாக்குதல்:

இந்தியாவில் போராட்டம் செய்பவர்கள் பத்திரிகையாளர்களைத் தாக்கியது உண்டு. அத்தகைய முரட்டுத்தனத்தை சந்திக்கும் போது பின்வருவனவற்றை கருத்தில் கொள்க:

  • ஒரு கூட்டத்தை அணுகும் முன்பு போராளிகளின் மனப்பான்மை பத்திரிகையாளர்களிடம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து தாக்கக்கூடியவர்கள் பற்றிய கவனத்துடன் இருக்க வேண்டும்.
  • முரடர்களின் உடல்மொழியை (body language) அறிந்து கொண்டு, உங்கள் உடல்மொழி மூலம் சுழ்நிலையை சமாதானப் படுத்த வேண்டும். 
  • முரடர்களின் கண்ணைப் பார்த்துக் கொண்டே, கைகளை விரித்து அமைதியாகப் பேச வேண்டும்.
  • அச்சுறுத்துபவர்களிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தில் இருந்து கொள்ளவும். முரட்டுத்தனம் இல்லாமல் பின்வாங்கியோ, விலகியோ போகவும். மாட்டிக்கொள்ள நேரிட்டால், ஆபத்து என்றால் கத்தவும்.
  • சூழ்நிலையில் முரட்டுத்தனம் அதிகமானால், தலையைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு கையை வைத்துக் கொண்டு, விழாமல் இருக்கும்படி சிறு அடிகளை வைத்து நகரவும். உங்கள் குழுவுடன் இருப்பின் கை கோர்த்துக் கொண்டு சேர்ந்து கொள்ளவும். 
  • கூட்டத்தில் ஏற்படும் கலவரத்தை பதிவு செய்வதும் பத்திரிகையாளரின் முக்கியமான வேலையாகும். அத்தகைய நேரங்களிலும், சூழ்நிலை பற்றிய அறிதலும், உங்களுடைய பாதுகாப்பு பற்றிய கவனமும் இருக்க வேண்டும். அந்நேரங்களில் முரடர்களைப் படம் பிடிப்பதும் ஆபத்தை அதிகப்படுத்தும். 
  • அணுகி மிரட்டப்பட்டால், முரடர்கள் கேட்பதைக் கொடுத்து விடவும். கருவிகள் உங்கள் உயிரைவிட முக்கியமானது அல்ல.

உடல்ரீதியான பாதுகாப்பு: விரோத சூழலிலிருந்து செய்தி சேகரிப்பு

பத்திரிகையாளர்கள் சில நேரங்களில் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளிலிருந்து ரிப்போர்ட் செய்ய வேண்டி வரும். அக்கூட்டம், தங்களைப் பற்றி தவறாகவும், எதிர் மறையாகவும் ஊடகங்கள் சித்தரிப்பார்கள் என்று எண்ணலாம். தேர்தல் சமயங்களில் பத்திரிகையாளர்கள் அம்மாதிரி விரோத மனப்பான்மை கொண்ட கூட்டங்களில் நீண்ட நேரம் வேலை செய்ய நேரிடலாம்.

அம்மாதிரியான ஆபத்துக்களை தவிர்க்க:

  • அக்கூட்டத்தைப் பற்றியும், அவர்களின் கருத்துக்களைப் பற்றியும் முன்கூட்டியே அறிந்து கொள்வது நல்லது. ஊடகங்களைப் பற்றி அவர்களின் எண்ணம் என்னவென்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்றார் போல தன்னைப் பற்றி அதிகம் வெளிக்காட்டாமல் இருக்க வேண்டும்.
  • அக்கூட்டத்தை அணுக முன்கூட்டியே முயற்சிக்கவும். அழைப்பில்லாமல் சென்றாலோ அல்லது வேறு ஒருவரின் வார்த்தையை நம்பி போனாலோ ஆபத்துக்கள் நேரிடலாம். போகும் இடம் பற்றி அதிகம் தெரியாமலும், அங்கு நீங்கள் வெளியாள் என்று கருதப்படுவீர்கள் என்ற பட்சத்திலும் நீங்கள் பின்வரும் முறைகளை கையாளலாம். அங்கீகரிக்கும் உள்ளூர்வாசியையோ, தலைவரையோ அல்லது ஒரு மரியாதைக்குரிய மனிதரையோ அணுகி, உடன் வரவும், வேலைகளை ஒருங்கிணைக்கவும் உதவி கேட்கலாம். அவசர காலங்களில் உதவ அவர்களில் அதிகாரம் மிகுந்த மனிதரை அடையாளப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.
  • அக்குழுக்களில் மது அருந்துவதும், போதை மருந்துகள் உட்கொள்வதும் அதிகம் இருந்தால் எதிர்பாராத ஆபத்துகள் நேர வாய்ப்புகள் மிகுதி.
  • தனித்து வேலை செய்வதை விட குழுவாக வேலை செய்வதே ஏற்றதாகும். அல்லது கூடவே வேறு நபரோடு செல்வது நல்லது. ஆபத்திற்கு தகுந்த படி, இந்த நபர் பக்கத்தில் ஒரு பாதுகாப்பான இடத்தில் (ஷாப்பிங் மால், பெட்ரோல் பங்க் போன்றவற்றில்) காத்திருந்து உதவலாம்.
  • போகுமிடத்தின் சூழ்நிலையை அறிந்து அதற்கேற்றார் போல திட்டமிடல் நலம். ஆபத்து அதிகமென்றால் அதற்கேற்ற பாதுகாப்பு அவசியம். நீங்கள் உங்கள் வேலையில் ஆழ்ந்திருக்கும் போது உங்களையும், உங்கள் பொருட்களையும் பாதுகாக்க ஒரு உள்ளூர் நபரை வேலைக்கு அமர்த்தி கொள்ளலாம்.
  • அவசர காலத்தில் உடனே கிளம்ப ஓட்டுனரோடு உங்கள் வாகனத்தை பக்கத்தில் காத்திருக்க செய்தல் நலம்.
  • நீங்கள் வேலை செய்யுமிடம் உங்கள் போக்குவரத்து வாகனத்திலிருந்து தள்ளியிருந்தால், அவ்விடத்திற்கு விரைவில் திரும்ப அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் இருக்குமிடத்தின் அடையாளங்களை உங்களுடன் வேலை செய்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • மருத்துவ உதவி தேவையானால் எங்கு செல்வது என்பதையும், வெளியேறும் வழியையும் அறிந்திருப்பது நலம்.
  • அங்கிருந்து வெளியேறுவது கடினமாக இருக்கும் பட்சத்தில் ஒருவரை படம் எடுப்பதற்கு முன்பு அவரிடம் அனுமதி பெறுவது நல்லது.
  • உங்களுக்கு வேண்டிய செய்திகள் கிடைத்தவுடன், மேலும் நேரம் கடத்தாமல் உடனே அவ்விடத்தை விட்டுக் கிளம்புவது நல்லது. முன்பே ஒப்புக்கொள்ளப்பட்ட நேரத்துக்குள்ளாகவே அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும். உங்களுடன் வேலை செய்பவர் எவரேனும் அச்சூழ்நிலையில் சங்கடமாக உணர்ந்தால் அதிகம் விவாதம் செய்யாமல் உடனே கிளம்பவும்.
  • உங்கள் உடைகளில் உங்கள் ஊடகப் பெயரோ அல்லது (லோகோவோ) அடையாளமோ இருக்க வேண்டாம். உடைகளும் அவ்விடத்திற்கேற்றவாறு பொருத்தமானவையாக மரியாதை தரும் விதத்தில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் ஊடக அடையாளத்தை (லோகோ) உங்கள் சாதனம் மற்றும் வாகனங்களிலிருந்தும் நீக்கி விடுங்கள்.
  • ஒரு மருத்துவ பெட்டியையும் (first aid kit) உபயோகப் படுத்த தெரிந்து கொண்டு எடுத்துச் செல்வது நல்லது.
  • எல்லா நபர்களுக்கும், அவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளியுங்கள்.
  • மதிப்பு மிக்க பொருட்களையும், பணத்தையும் குறைவாக வைத்திருங்கள். உங்களிடமிருக்கும் சாதனங்களுக்காக நீங்கள் மிரட்டப்பட்டால் கேட்பதை கொடுத்து விடுங்கள். உங்கள் உயிரை விட சாதனங்கள் முக்கியமல்ல.
  • இரவு நேரங்களில் இவ்வித வேலைகள் செய்வது ஆபத்தை பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் அவற்றை தவிர்பது நலம்.
  • செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு அதை திரட்டிய இடத்திற்குத் திரும்ப செல்ல நேரிடுமா என்பதை யோசியுங்கள். நீங்கள் திரும்பச் செல்லும் போது வரவேற்பு எப்படி இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.