மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள், ஊழல், அல்லது சிவில் குழப்ப நிலை போன்ற விடயங்கள் தொடர்பான கதைகளை நீங்கள அறிக்கையிடும் வேளை, நீங்கள் கைது செய்யப்படும் மற்றும் தடுத்து வைக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாகும், குறிப்பாக அதிக இராணுவ மற்றும் பொலிஸ் பிரசன்னம் மிக்க சர்வாதிகார ஆட்சி நிலவும் நாடுகளில் இதன் சாத்தியம் உயர்வானதாகும்.
அதிகார தரப்புகளை எதிர்கொள்ளும் வேளை பொதுவாக அவர்களின் கட்டளைகளை ஏற்று நடக்கும் சூழ்நிலை உருவாகின்றது, அவர்களின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானவையாக இருப்பினும் உங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியுள்ளது.
ஊடகவியலாளர்கள் தம்மை சிறப்பாக பாதுகாத்துக் கொள்வதை உறுதி செய்ய பின்வரும் உடலியல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு அறிவுரையினை பின்பற்றுவதை கருத்திற்கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் பாதுகாப்பு அறிவுரை
சாத்தியமான கைது அல்லது தடுத்து வைக்கப்படுவதற்கு முன்னதாகவே உங்களின் கருவிகள் மற்றும் அவை கொண்டுள்ள தரவுகளை பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது உங்களைப் பற்றியும் உங்கள் மூலங்கள் பற்றியும் காணப்படும் தரவுகளை அணுகுவதற்கான சாத்தியத்தை குறைக்கும்.
உங்களின் கருவிகளை தயார்படுத்தல்
நீங்கள் கைது செய்யப்படும் அல்லது தடுத்து வைக்கப்படும் வேளை உங்களின் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றில் தேடுதல்கள் மேற்கொள்ளப்படும்.
உங்களின் கருவி மற்றும் அது கொண்டுள்ள தரவுகளைப் பாதுகாக்க பின்வரும் படிநிலைகளை பின்பற்றுங்கள்:
- உங்கள் கருவி மற்றும் மற்றும் தரவுகளுக்கு தனிப்பட்ட அடையாள இலக்கம் அல்லது கடவுச் சொல் பாதுகாப்பை வழங்குங்கள். எனினும், இது அதிகார தரப்புகள் உங்களின் கருவியை திறப்பதில் இருந்து தடுப்பதில் வெற்றிகரமானதாக அமையாமல் இருக்கலாம் என்பதை அறிந்திருங்கள்.
- நீங்கள் அறிக்கையிடும் நாட்டில் Encryptipn பயன்படுத்துவது தொடர்பில் காணப்படும் சட்டத்தினை அறிந்து கொள்ளுங்கள், மேலும், அதனை உங்களின் கணணிகள் மற்றும் ஏனைய அன்ட்ரொய்ட் கருவிகளுக்கு செயற்படுத்துவது பற்றி கருத்திற்கொள்ளுங்கள். அண்மைய iPhone தொலைபேசிகள் Encryption வசதியை தயாரிப்பில் உள்ளடக்கியனவாக வருகின்றன. அதனை Power Down செய்து செயற்படுத்த நேரிடும்.
- ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளடங்கலாக என்ன தரவுகள் உங்கள் கருவியில் உள்ளன என்பதையும் அவை கருவியின் எவ்விடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிந்திருங்கள். உங்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என நீங்கள் கருதும் தரவுகளை அகற்றி விடவும்.
- Hard Drive போன்ற வெளிப்புற சேமிப்பகங்களில் உங்கள் தகவல்களை தொடர்ச்சியாக Back up செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் கருவியில் உள்ள தகவல்களை அழித்து விட வேண்டும். எவ்வாறாயினும், நுட்பமான தொழில் நுட்பம் கொண்ட அதிகார தரப்புகள் அல்லது குற்றம் புரியும் குழுக்கள் அவ்வாறு அழிக்கப்பட்ட உள்ளடக்கங்களையும் மீட்டெடுக்கும் திறன் வாய்ந்தன என்பதை கவனத்தில் கொள்ளவும்.
- உங்களின் வெளிப்புற சேமிப்பகங்களை Encryption செய்து கொள்ளுங்கள். உங்கள் தரவுகளின் பிரதிகளை ஒன்றுக்கு மேற்பட்ட வெளிப்புற சேமிப்பகங்களில் கொண்டிருப்பதும் அவற்றை உங்களின் வீடு மற்றும் பணித்தளம் அல்லாத வேறுபட்ட இடங்களில் பாதுகாப்பாக வைப்பதும் ஒரு சிறந்த யோசனையாகும். நீங்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் வீடு மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் சோதனைகள் இடம்பெற முடியும்.
- உங்களின் இணைய உலாவல் வரலாற்றை தொடர்ச்சியாக அகற்றி வருவதுடன் உங்களின் அனைத்து பயனர் கணக்குகளில் இருந்தும் தொடர்ந்து log out செய்து வரவும்.
- உங்களின் தகவல் பரிமாற்ற செயலிகளில் என்ன உள்ளடக்கம் உள்ளது என்பதை அறிந்திருப்பதுடன் அவற்றை தொடர்ச்சியாக Back Up செய்தல் மற்றும் அழித்தல் என்பவற்றுக்கு தொடர் செயன்முறை ஒன்றை உருவாக்குங்கள்.
- உங்களின் கையடக்க தொலைபேசி மற்றும் தொடர்பாடல் செயலிகளில் காணப்படும் தொடர்புகளை முகாமைத்துவம் செய்யுங்கள். உங்களை அல்ல மூலங்களை அபாயத்தில் விடலாம் என நீங்கள் உணரும் நபர்களை அவற்றில் இருந்து அகற்றி விடவும். தொடர்பு விபரங்கள் தொடர்பாடல் செயலி, Cloud மற்றும் சிம் அட்டைகளில் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- உங்கள் கருவிகளுக்கு தூர இடங்களில் இருந்து தகவல்களை அழிக்கும் வசதியை (Remote Wipe) வசதியை ஏற்படுத்துங்கள். நீங்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அல்லது தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கருவியின் தரவூகளை Remote Wipe மூலம் அழிப்பதற்கு நேரம் கிடைக்காது என நீங்கள் கருதினால் அதனை உங்களுக்காக மேற்கொள்வது தொடர்பில் நம்பிக்கைக்குரிய தொடர்பு நபர் ஒருவரிடம் இது பற்றி கலந்துரையாடி வைக்க வேண்டும். அவ்வாறு Remote wipe செய்வது உங்களை மேலும் சந்தேகத்துக்குரிய நபராக மாற்றுமா என்பதையும் சிந்தனை செய்யுங்கள்.
- உங்களின் கருவிகள் கண்பார்வையில் அகற்றப்பட்டு காலம் கடந்து உங்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டால், அவற்றில் உளவுபார்க்கும் மென்பொருட்களை அவர்கள் உட்புகுத்தியிருக்க கூடும். சாத்தியமாயின் நீங்கள் புதிய கருவிகளை வாங்க வேண்டும். அது உங்களுக்கு சாத்தியமில்லை எனில் நீங்கள் (Factory Reset) செயற்பாட்டை உங்கள் கைத் தொலைபேசிக்கு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதும் சில வேளைகளில் அந்த உளவு பார்க்கும் மென்பொருளை அகற்ற தவறலாம்.
உங்களின் பயனர் கணக்குகளை பாதுகாத்தல்
நீங்கள் தடுப்புக்காவலுக்கு உட்படும் வேளை உங்களின் இணைய பயனர் கணக்குகளின் கடவுச் சொற்களை வழங்குமாறு கேட்கப்படலாம். உங்களின் பயனர் கணக்குகளை அவர்கள் அணுகுவதை உங்களால் தடுக்க முடியாத நிலையில், அவர்களுக்கு கிடைக்கும் தரவுகளின் அளவை குறைப்பதற்கான முன்தடுப்பு படிநிலைகளை உங்களால் மேற்கொள்ள முடியும்.
உங்களின் பயனர் கணக்குகளில் உள்ள உள்ளடக்கங்களுக்கான மக்களின் அணுகலை மட்டுப்படுத்தல்:
- உங்களின் அனைத்து பயனர் கணக்குகளிலும், விசேடமாக மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளில் உள்ள உள்ளடக்கங்களை தொடர்ச்சியாக மீளாய்வு செய்யுங்கள். உங்களையும் ஏனையோரையும் அபாயத்தில் தள்ளி விடக் கூடிய தகவல்கள் என்பதை அறிந்திருங்கள்.
- பழைய மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடக குறுந்தகவல்கள் உள்ளடங்கலாக இந்த பயனர் கணக்குகளில் உள்ள உள்ளடக்கங்களை தொடர்ச்சியாக Back Up செய்து அவற்றை அழித்து விடவும். இவற்றின் ஊடாக உங்களுடன் தொடர்பாடிய மற்றைய நபர் அவற்றை அழிக்காத வரையில் அவை கணக்கில் இருந்து அழிக்கப்பட மாட்டாது. Signal அல்லது WhatsApp போன்ற முனைக்கு முனை Encryption வசதி கொண்ட சேவை ஒன்றைப் பயன்படுத்தாத விடத்து உங்களின் மின்னஞ்சல்கள் மற்றும் குறுந்தகவல்கள் உள்ளடங்கலாக உங்களது அனைத்து தரவுகளினதும் பிரதிகள் சேவை வழங்கும் கம்பனியினால் பேணப்படுவதுடன் அப்பிரதி அரசாங்கங்களின் ஆணைகள் மூலம் பெறப்படலாம்.
- உங்கள் சமூக ஊடகங்களில் நீங்கள் யாருடன் தொடர்பில் உள்ளீர்கள் என்பது பற்றிய அதிகளவான தகவல்களை நீங்கள் பின்தொடரும் நபர்கள் மற்றும் நண்பர்களின் பட்டியல்கள் வழங்குகின்றன. இத்தகவல்கள் உங்களின் தனிப்பட்ட மற்றும் உத்தியோகம் சார்ந்த வலையமைப்புகளை வரைபடமாக்க பயன்படுத்தப்படலாம். சமூக ஊடகத்தில் நீங்கள் பின் தொடரும் நபர்கள் மற்றும் நண்பர்களின் பட்டியல்களை மீளாய்வு செய்து உங்களையும் ஏனையோரையும் அபாயத்தில் தள்ளி விட சாத்தியமான நபர்கள் அப்பட்டியல்களில் காணப்படின் அவர்களை அகற்றி விடவும். இந்த தரவின் பிரதி ஒன்று சேவை வழங்கும் கம்பனியின் சேர்வரில் காணப்படுவதுடன் அதனை அரசாங்கம் கோரிக்கை விடுத்து பெற்றுக்கொள்ள முடியும்.
- குடும்ப உறுப்பினர்கள் போன்ற தனிப்பட்ட தொடர்புகள் அத்துடன் மூலங்கள் உள்ளடங்கலாக தொழில் சார் தொடர்புகளை அறிவதற்கு இணையச் சேவைகளில் வைத்திருக்கும் படங்கள் மற்றும் காணொளிகள் உதவும் என்பதை கருத்திற் கொள்ளுங்கள்.
- உங்களின் பயனர் கணக்குகளில் இருந்து தொடர்ச்சியாக Log out செய்து வெளியேறல் மற்றும் தொடர்ச்சியாக உங்கள் இணைய உலாவல் வரலாற்றை அழித்தல் என்பவற்றின் ஊடாக உங்கள் பயனர் கணக்குகளை அடுத்தவர்கள் அணுகுவதை சிரமமானதாக ஆக்குங்கள். உங்களின் கணணி அல்லது கைத்தொலைபேசியில் காணப்படும் மின்னஞசல் மற்றும் ஏனைய செயலிகளின் எண்.
உடலியல் பாதுகாப்பு அறிவுரை
ஒதுக்கப்பட்ட பணிக்கு செல்லும் முன்னர் கருத்திற் கொள்ள வேண்டியவை
- நீங்கள் அறிக்கையிடும் நாட்டில் ஒரு ஊடகவியலாளராக உங்களின் சட்ட ரீதியான உரிமைகள் எவை என ஆய்வு செய்து புரிந்து கொள்ளுங்கள். பின்வரும் விடயங்களை கண்டறிய முயற்சி செய்யுங்கள்:
— எதற்காக நீங்கள் கைது செய்யப்படலாம் / கைது செய்யப்பட முடியாது;
— முன்னர் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விபரங்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டனர்;
— குறித்த நாளில் எந்தப் பிரிவுகள் கைதுகளை மேற்கொள்ளும் சாத்தியம் மிக்கன (அதாவது: சீருடை அணிந்த பொலிசார், இரகசிய பொலிசார், இராணுவம் போன்றன);
— குற்றம் சுமத்தப்பட முன்னர் நீங்கள் எவ்வளவு காலம் தடுத்து வைக்கப்படலாம்;
— நீங்கள் தொலைபேசி அழைப்பு(களை) மேற்கொள்ள அனுமதிக்கப்படுவீர்களா, அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் யாருடன் பேச முடியூம்;
— உங்களின் மொழி பேசும் சட்டத்தரணி / சட்டப் பிரதிநிதியின் அணுகல் உங்களுக்கு வழங்கப்படுமா;
— சட்டத்தரணி சட்டப் பிரதிநிதிக்கு யார் பணம் செலுத்த வேண்டும்;
— உங்களின் தூதுவராலயம் / உயர் ஸ்தானிகராயலத்துக்கு உங்களின் கைது தெரியப்படுத்தப்படுமா (பொருத்தமாயின்);- கைது செய்யப்பட்டால் நீங்கள் எங்கே கொண்டு செல்லப்படும் சாத்தியம் உண்டு.
- ஒதுக்கப்பட்ட பணியை மேற்கொள்ள செல்லும் வேளை நீங்கள் கைது செய்யப்படும் வாய்ப்பை அதிகரிக்கும் விடயங்களைக் கொண்டு செல்வது தொடர்பில் சிந்தனைகளை மேற்கொள்ளுங்கள் (உதா: சடலைட் போன்கள்இ, வாக்கி டாக்கிகள், தொலைநோக்கிகள், இராணுவ பாணியிலான உடைகள், நைட் விசன் கண்ணாடிகள் போன்றன).
- எப்போதும் சரியான மற்றும் செல்லுபடியான ஆவணங்களை கொண்டு செல்வதை உறுதி செய்யுங்கள் (ஊடக அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச் சீட்டு, விசா போன்றன).
- எப்போதும் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட கைத்தொலைபேசி, ஓரளவுக்கு பணம், நீங்கள் உட்கொள்ளும் ஏதாவது மருந்துகள், குடிநீர் போன்ற அடிப்படை வழங்கல்கள், சக்தி வழங்கும் தின்பண்டங்கள் மற்றும் காலநிலைக்கு பொருத்தமான உடை போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள்.
- சூழ்நிலைகளுக்கு பொருத்தமான வகையில் உடை அணியுங்கள். நீங்கள் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டால் ஒரே ஆடையை தொடர்ச்சியாக அணிந்திருக்க வேண்டும்.
- நீங்கள் கைது செய்யப்பட்டால் எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும் என சிந்தனை செய்யுங்கள். பொலிஸ் அதிகாரிகள் இடம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப மூர்க்கமாகவும் தாக்கும் தன்மையுடனும் நடந்து கொள்வார்கள் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
- கருவிகளின் இழப்பை தடுக்கும் வகையில் தேவையான மற்றும் மிகக் குறைவான கருவிகளையே கொண்டு செல்லுங்கள். மேலதிக தகவல்களுக்கு CPJ அமைப்பின் அபாய நேரிடர் மதிப்பீடு வடிவத்தை நோக்கவும்.
தொடர்பாடல்
- நீங்கள் கைது செய்யப்பட்டால் தொடர்பு கொள்ள முடியுமான சட்டப் பிரதிநிதி ஒருவரை அடையாளம் காணுங்கள். அவர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு இலக்கங்களை உங்களின் தொலைபேசியில் சேமிப்பதுடன் அவற்றை காகிதத் துண்டு ஒன்றில் அல்லது / அத்துடன் உங்களின் கைகளில் எழுதி வைத்திருங்கள்.
- நீங்கள் வெளிநாடொன்றில் பணி புரிந்தால் உங்களின் தூதுவராலயம் / உயர் ஸ்தானிகராலயத்தின் அவசர தொடர்பு விபரங்களை உங்களின் தொலைபேசியில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
- தனியாக பணி புரிவதை தவிர்த்துக்கொள்ள் முயற்சி செய்யுங்கள். அவ்வாறு தனியாக பணி புரிந்தால் நீங்கள் கைது செய்யப்படும் / தடுத்து வைக்கப்படும் வேளை எச்சரிக்கை மணி எழுப்பப்படுவது தாமதமாகும்.
- கைது / தடுத்து வைக்கப்படலுக்கான வாய்ப்பு உள்ளதாயின், உங்களின் அலுவலகம், குடும்பம் அல்லது நண்பரை தொடர்ச்சியாக நேரடியாக சந்திக்கும் வழக்கம் ஒன்றை ஏற்படுத்துங்கள். நீங்கள் எவ்வளவு அடிக்கடி அவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்பதையும் அவர்கள் எந்நேரத்தில் உங்களை எதிர்பார்க்கலாம் போன்ற விடயங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
பணிகளை மேற்கொள்ளும் வேளை
- ஒரே இடத்தில் நீடிக்கப்பட்ட நேரம் ஒன்றில் சுற்றித்திரிவதை தவிர்த்துக்கொள்ளுங்கள், அவ்விடம் அரசியல் கட்டடம் போன்ற கூருணர்திறன் மிக்க இடம் எனில் இது விசேடமாக பின்பற்றப்பட வேண்டும்.
- பல நாடுகளில், பொலிஸ் அதிகாரிகள் தாம் புகைப்படம் அல்லது காணொளி எடுக்கப்படுவதை விரும்புவதில்லை. பொலிசாருக்கு நெருக்கமாக அல்லது அவர்களைச் சூழ பணிகளை மேற்கொள்ளும் போது இதனை மனதில் நிலைநிறுத்துங்கள்.
- ஆயுதங்கள், மதுபானம், போதைப் பொருட்கள் அல்லது ஏனைய கூருணர்திறன் மிக்க பொருட்களை ஒரு போதும் காவிச் செல்ல வேண்டாம். அவை நீங்கள் கைது செய்யப்படும் சாத்தியத்தை அதிகரிக்கும்.
நீங்கள் கைது செய்யப்பட்டால் / தடுத்து வைக்கப்பட்டால்
- உங்களைக் கைது செய்யும் முன்னர் நீங்கள் கைது செய்யப்படுகின்றீர்கள் என்பதையும் கைதுக்கான காரணத்தையும் பொலிஸ் அதிகாரி உங்களுக்கு கூற வேண்டும். கைது மேற்கொள்ளப்பட்ட இடம் நேரம் மற்றும் கைதுக்கு வழிவகுத்த காரணங்கள் பற்றி கவனம் செலுத்துங்கள்.
- எப்போதும் அமைதியாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் தொப்பி அல்லது / அத்துடன் குளிர் கண்ணாடியை அணிந்திருந்தால் அவற்றை அகற்றுங்கள். அதிகாரியுடன் கண் தொடர்பை பேணுவதுடன் சாத்தியமாயின் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டாம்.
- நீங்கள் கைது செய்யப்படுவதை புகைப்படம் எடுப்பது அல்லது காணொளி எடுப்பதை தவிர்ப்பது அறிவுரை செய்யப்படுகின்றது – அது பொலிசாரை தூண்டும் விடயமாக அமைவதுடன் உங்கள் கருவி பறிமுதல் செய்யப்பட அல்லது சேதப்படுத்தப்பட அது வழி வகுக்கலாம்.
- சாத்தியமான அனைத்து வேளைகளிலும் உங்களின் பை, கருவிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களை உங்களின் கண்பார்வைக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.
- ஆஸ்த்துமா மற்றும் நீரிழிவு போன்ற உங்களின் ஆரோக்கிய நிலைகளை பொலிசார் அறிவதை உறுதிப் படுத்துங்கள். நீங்கள் கைது செய்யப்பட்டவுடன் உங்களின் ஆரோக்கிய நிலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நீங்கள் மருந்துகளை உட்கொள்பவராயின் அதனை முடிந்தளவு விரைவில் பொலிசாருக்கு தெரியப்படுத்தவும்.
- நீங்கள் உள நல பிரச்சினைகளின் வரலாற்றை கொண்டவராயின் அல்லது அந்நேரத்தில் உங்களுக்கு உளச் சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை பொலிசாருக்கு கூறவும்.
- சாத்தியமாயின், உங்களுடன் ஈடுபாட்டினை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள், இலக்கங்கள், திணைக்களங்கள் மற்றும் உடனடியாக அடையாளம் காணக்கூடிய அம்சங்கள் (உதா: பச்சை குத்தல்கள், முகத்தில் உள்ள முடிகள் போன்றன) என்பன உள்ளடங்கலாக தகவல்களை ஆவணப்படுத்துங்கள்.
- சம்பவத்தை அவதானித்துக் கொண்டிருக்கும் தனிநபர்களில் கவனம் செலுத்துங்கள். அவர்கள் உங்களுக்கு சாட்சியாக செயற்படக் கூடும். தேவையாயின் எச்சரிக்கை மணி எழுப்ப உதவுமாறு அவர்களிடம் கூறுங்கள்.
- உங்களால் உள்ளூர் மொழியை பேச அல்லது எழுத முடியாது இருப்பின், மொழிபெயர்ப்பாளர் / அல்லது அத்துடன் சட்டத்தரணி அல்லது சட்டப் பிரதிநிதியின் பிரசன்னம் இன்றி ஆவணங்களில் கையெழுத்திடவோ அல்லது எதனையும் ஏற்றுக் கொள்ளவோ வேண்டாம்.
- உங்களிடம் சட்டவிரோதமான பொருட்கள் உள்ளன என பொலிஸ் அதிகாரிகள் கருதினால் அவர்கள் உங்களை சோதனையிடலாம், தட்டிப் பார்க்கலாம் அல்லது உடைகளை அகற்றி சோதனை மேற்கொள்ளலாம். உடைகளை களைந்து மேற்கொள்ளப்படும் சோதனை ஒரு அந்தரங்கமான இடத்தில் இடம்பெறலாம். அங்கு நீங்கள் அதிக பாதிப்புறும் ஏதுநிலை மிக்கவராக காணப்படலாம். உடைகளை களைந்து மேற்கொள்ளப்படும் சோதனையின் போது பல அதிகாரிகள் எப்போதும் பிரசன்னமாயிருக்கலாம். அவ்வாறான சோதனைகள் பெண் அதிகாரிகளால் நடத்தப்பட வேண்டும் என கைது செய்யப்பட்ட பெண் ஊடகவியலாளர் வலியுறுத்த வேண்டும்.
- கைதின் போது நீங்கள் காணப்படும் இடத்துக்கு ஏற்ப, பொலிஸ் அதிகாரிகள் உங்களை மிரட்டலாம் அல்லது / அத்துடன் குற்றம்; ஒன்றை ஏற்றுக்கொள்ள உங்களை பலவந்தப்படுத்தலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் கூறும் கதையுடனேயே நிலைத்திருங்கள், நீங்கள் செய்யாத ஒன்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம், அத்துடன் சட்ட உதவி வரும் வரை காத்திருங்கள்.
- பொலிஸ் அதிகாரியினால் நீங்கள் தாக்கப்பட்டால் உங்களின் காயங்கள், பெறப்பட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் ஏதாவது வைத்தியசாலை விஜயம் போன்ற விடயங்களின் பதிவுகளை பேணுவதற்கு முயற்சிக்கவும். பொறுப்பான நபர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் தோற்ற விபரம் போன்றவற்றை குறித்துக்கொள்ள முயற்சிக்கவும்.
CPJ அமைப்பின் இணைய பாதுகாப்பு தொகுதி ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி அறைகளுக்கு உடலியல், டிஜிட்டல் மற்றும் உளவியல் பாதுகாப்பு வளங்கள் மற்றும் கருவிகளை வழங்குகின்றது. இதில் மக்கள் கொந்தளிப்புகளின் போது ஊடகப்பணி மேற்கொள்வதும் உள்ளடங்குகின்றது. ஊடகவியலாளர்களுக்கு உதவி அவசியமாயின் CPJ நிறுவனத்தை என்ற emergencies@cpj.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.